Tsunami | 16 ஆண்டுகளாக அரசின் நிவாரண உதவி கிடைக்காமல் தவிப்பு.. சுனாமி பேரலையில் சிக்கி மீண்டவரின் கதை… | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


Last Updated:

சுனாமி பேரலையில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டவர் மீண்டு வந்த நிலையில், 16 ஆண்டுகளாக அரசின் நிவாரண உதவி கிடைக்காமல் தவித்து வருகிறார்.

2004ம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட சுனாமி பேரலை கடலோர மாவட்ட மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டது.16 ஆண்டுகள் ஆன போதும் அதன் சுவடுகள் இன்னும் நீடிக்கின்றன. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கானாத்தூரை சேர்ந்த சண்முகவேல் மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி அலையில் சிக்கி கடற்கரை மணலில் புதையுண்ட சண்முகவேல் அதற்கு மறுநாள் மீட்பு படையினரால் மீட்கப்பட்டார்.

மூச்சு பேச்சற்று கிடந்த சண்முகவேலை இறந்துவிட்டதாக நினைத்து தாம்பரம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அவரது உடலை அனுப்பியுள்ளனர். உடல்பிரேத பரிசோதனைக்கு முன்னதாக சண்முகவேலின் உடலில் நாடித்துடிப்பு இருப்பதைக் கண்ட மருத்துவர்கள், உடனடியாக அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். 6 மாத சிகிச்சைக்கு பின் கோமாவில் இருந்து மீண்டு வந்த அவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

16 வருடங்கள் கடந்தும் தற்போது வரை அரசு நிவாரணம் கிடைக்காத சண்முகவேல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்தை ஈர்க்கும் விதமாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு கொடுத்துள்ளார். சுனாமியில் மணலுக்குள் புதையுண்டவருக்கு கடல்நீருடன் ஒரு கிலோவிற்கு மேலான மணலும் அவருடைய வயிற்றில் புகுந்துள்ளது. இதனால், குடல் இறக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள சண்முகவேல் உடலளவிலும், மனதளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது குடும்பத்துடன் ஈரோடு மாவட்டத்திற்கு குடிபெயர்ந்து கூலி வேலை செய்து வரும் சண்முகவேல், இனி உடல் உழைப்பு மேற்கொள்ள முடியாத நிலையில் இருப்பதால் தனக்கு அரசு அறிவித்த வேலையை தன் வாரிசுகளில் ஒருவருக்கு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். சுனாமி பேரலையில் பாதிக்கப்பட்டு 16 ஆண்டுகளாக நிவாரண உதவி கிடைக்காமல் தவிக்கும் சண்முகவேலுக்கு அரசு நிவாரணம் அளிக்குமா?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *